ஆன்மிகம் அறிவோமா
மனிதர்களுக்கும், மகான்களுக்கும் என்ன வித்தியாசம்? தமக்கு மேலே இருக்கிறவர்களையே எப்போதும் மனிதர்கள் கவனித்துக் கொண்டிருக்கின்றனர்... ‘அவர்களைப் போல் ஆவது எப்போது?’ என்கிற ஆசையில்!தமக்கு கீழே இருக்கிறவர்களையே எப்போதும் மகான்கள் கவனித்துக் கொண்டிருக்கின்றனர்... ‘அவர்களும் நம்மைப் போல் ஆவது எப்போது?’ என்கிற அக்கறையில்! அந்த வகையில், நல்வாழ்விற்கு மகான்கள் காட்டிய பாதை இரண்டு. ஒன்று ஆன்மிகம்; இன்னொன்று நற்பண்பு. இவை இரண்டும் ஒரே புள்ளியில் இணையும் இரு கோடுகள். ஒரே நேரத்தில், இந்த இரு பாதைகளிலும் பயணிப்பதற்கான வாய்ப்பே இந்த புத்தகம். அனைத்து வயதினருக்கும் ஏற்ற வகையிலும், எளிய நடையிலும் அறிவுரைகள் இடம்பெற்றிருப்பது இந்த புத்தகத்தின் கூடுதல் சிறப்பு. ‘ஆன்மிகம் அறிவோமா’ என்ற தலைப்பில் தினமும் ‘தினமலர்’ நாளிதழ் வெளியிட்டு வரும், மகான்களின் அறிவுரைகள் தொகுக்கப்பட்டு இப்போது புத்தகமாக வெளிவந்துள்ளது. மொத்தத்தில், ‘ஆன்மிகம் அறிவோமா’ அள்ள அள்ள குறையாத அறிவுப் பாத்திரம்!– வெற்றி