பாரதி தரிசனம்
பாரதி வாழ்க்கை, அவரது இலக்கிய பார்வை, சமூகப் பொறுப்பு என்ற தளங்களில் கருத்துகளை வெளிப்படுத்தும் நுால். புத்தகம் 16 அத்தியாயங்களாக தயாரிக்கப்பட்டுள்ளது. ஒவ்வொன்றும் பாரதியின் தனிப்பட்ட கனவுகள், சமூகவியல் கொள்கை, கவிதைகள் ஏற்படுத்திய தாக்கங்களை விவரிக்கின்றன. பாரதி கவிதைகளில் அழகியல் குறித்த செய்திகள் பெருமளவில் இடம் பெற்றுள்ளன. அவரது எழுத்து பாணி பற்றியும் விவாதிக்கப்பட்டுள்ளது. பாரதி எவ்வாறு கவிதைகளை சமூக மாற்றத்திற்கு பயன்படுத்தினார் என்பது தெளிவாக வரையறுக்கப் பட்டுள்ளது. சமூக சீர்திருத்தம், பெண்கள் மேம்பாடு, தேசிய சிந்தனை சார்ந்த விஷயங்களில் பாரதியின் அணுகுமுறை விரிவாக பதிவு செய்யப்பட்டுள்ளது. பாரதி கவிதைகளில் உள்ள பொருள் முக்கியத்துவம், பெருமை, தேசிய விழிப்புணர்வு பற்றி எடுத்துரைக்கும் வகையில் அமைந்துள்ளது. ஒவ்வொரு தலைப்பிலும் சுவாரசியம் மிக்க சொற்பொழிவு போன்று ஈர்க்கும் வகையில் எழுதப்பட்டுள்ளது. பாரதி வாழ்ந்த காலத்து சமூகப் பிரச்னைகள், அவற்றுக்கு கூறிய தீர்வுகள், அவற்றின் வழியாக இன்று பெறும் பாடங்கள் சிந்தனையை துாண்டும் வகையில் விவாதிக்கப்பட்டுள்ளன. பாரதி மீது ஆர்வமுள்ளோருக்கு மட்டுமின்றி, தமிழ் சமுதாய வளர்ச்சியில் அக்கறை உள்ளோருக்கும் பயன்படும் வகையில் உள்ளது. பாரதியின் ஆன்மிக நாட்டம், மக்கள் நலச் செயல்பாடு களை புரிந்துகொள்ள வழிகாட்டுகிறது. பாரதி கவிதைகள் வாசகர்களுக்கு உணர்த்தும் மனித நேயம் மற்றும் அரசியல் விழிப்பு பற்றி எடுத்துரைக்கின்றன. பாரதியின் வாழ்க்கை வரலாறு குறித்து புதுமையான பார்வையை அளிக்கிறது. பாரதி மீது ஆர்வமுள்ளோருக்கு அகன்ற ஜன்னலை திறந்துவிடும். பாரதியின் கருத்துகள் வழியாக சமூக பார்வையை மக்களுக்கு ஏற்படுத்தும் நுால். –-- இளங்கோவன்




