எம்.ஜி.ஆர்., கதை
அந்த வகையில், லட்சக்கணக்கானவர்களின் மனதில் இன்றும் எம்.ஜி.ஆர். வாழ்ந்துகொண்டிருக்கிறார், நாடகம், திரைத்துறை என, எதிலும் நல்லெண்ணத்தையும், நம்பிக்கையையும், வீரத்தையும் விடாமுயற்சியையும் விதைத்து வந்த அவர், அரசியலிலும் அசைக்க முடியாத சக்தியாக உருவெடுத்தார். கலை, பொதுவாழ்வு என எதிலும் தன்னிகரற்ற மனிதராய் இருந்த அவரது, தனிப்பட்ட வாழ்க்கை, மிகமிக எளிமையானது. இதற்கு அடித்தளமாய் இருந்த எம்.ஜி.ஆரின் வாழ்க்கை முறையை, அவர் வாழ்ந்த இடங்களுக்குச் சென்று, அவரது உறவுகள், நண்பர்கள், அறிமுகமானோரிடம் கேட்டறிந்து, தொகுத்துள்ளார், நூலாசிரியர் இதயக்கனி எஸ்.விஜயன். தங்கமணி என்ற பெண்ணுடன் எம்.ஜி.ஆருக்கு நடந்த முதல் திருமணம் துவங்கி, அவருடைய தனிப்பட்ட வாழ்க்கையில் நிகழ்ந்த, இன்ப, துன்ப நிகழ்வுகளை, புகைப்படங்களுடன் இந்த நூலில் தொகுத்துள்ளார். யாருக்கும் அறியாத அவரது கண் அறுவை சிகிச்சை, நாத்திகராக இருந்து ஆத்திகராகிய தருணம் என, பல சுவாரசியமான தகவல்களை இதில் சொல்லி உள்ளார். எளிய மனிதராக, நடிகராக, தலைவராக இருந்த எம்.ஜி.ஆர்., பற்றி அறியாத இன்றைய இளைய தலைமுறைக்கு இந்த புத்தகம் நல்ல வழிகாட்டி.




