மு.வ.நூற்றாண்டு விழா மலர்
184/88, பிராட்வே, சென்னை-108. (பக்கம்: 320) தமிழ்ச் சிந்தனை உலகம் என்றும் மறக்க முடியாத ஒரு பெயர் மு.வ. என்பது. அவருடைய இலக்கியத்தொண்டு அளப்பரியது. உரை நடை இலக்கியம் மு.வ.வால் உயர்வு பெற்றது. மறுமலர்ச்சி நாயகர் என்றும் உரைக்கலாம். சங்க இலக்கியத்தைச் சாமானிய மக்களுக்கும் அறிமுகம் செய்தவர் மு.வ. திருக்குறளுக்கு மு.வ.எழுதிய எளிய உரை மிகப் பிரபலமானது. நாவல், நாடகம், இலக்கணம், ஆய்வுநூல்கள், சமுதாயச் சிந்தனை, வாழ்க்கை வரலாறு என மு.வ.வின் ஒப்பரிய படைப்புகள் ஏராளம். அவருடைய நூற்றாண்டைத் தமிழ் கூறும் நல்லுலகம் கொண்டாடும் இவ்வேளையில், இம்மலர் வெளிவந்துள்ளது மிகப் பொருத்தம். நெ.து. சுந்தராவடிவேலு, பேராசிரியர் அகிலன், கி.வா.ஜ., நா.பார்த்தசாரதி போன்ற அறிஞர் பெருமக்கள் பல தருணங்களில் எழுதிய கட்டுரைகள், கவிதைகள் வாயிலாக இன்றைய தலைமுறையினர் அறிந்து கொள்ளும் வகையில் தொகுத்து வெளியிடப்பட்டியிருக்கிறது. பொருளடக்கம் இல்லாதது ஒரு குறை என்றாலும், மலர் மிகச்சிறப்பாக உள்ளது.




