/ ஆன்மிகம் / பெரியபுராணம் சில சிந்தனைகள்

₹ 100

சேக்கிழார் எழுதிய சிவனடியார்களின் அருள் வரலாறு, பெரியபுராணம். இதில் பொதிந்துள்ள சமுதாய நலம், பக்தி வளம், சேவை குணம், சித்தாந்த நெறி ஆகியவற்றை, அழகிய உரைநடையில் அளித்துள்ளார் ஆசிரியர்.வயதில் மிக்க அப்பர், ஞானத்தில் மிகுந்த திருஞானசம்பந்தரைப் பல்லக்கில் துாக்கி மகிழ்கிறார். இளையவர் தலைமையை மூத்தவர் ஏற்கும் புரட்சியாக இதை காட்டுகிறார். ‘இந்த உணர்வு தமிழர்களிடையே இன்று வருமானால், தமிழ் வாழும்! தமிழர் வாழ்வர்!’ (பக்., 18) என்றும் முத்திரை பதித்துக் காட்டிய இடம் பாராட்டுக்குரியது.மாற்று சமயம் சென்ற தம்பி திருநாவுக்கரசை, தமக்கை திருநீறு அளித்து, தாய் மதம் திரும்பச் செய்ததை, ‘பெண் தனி ஒருவராக செய்த சமயப்பணி’ என்று போற்றுகிறார்.காரைக்கால் அம்மையார், பரவையார், சங்கிலியார், திருநீலநக்கர் திருவாட்டி, மதங்க சூளாமணி ஆகிய தெய்வப் பணி மகளிர் தம் சிறப்பை, ஒப்புயர்வு இன்றி காட்டியுள்ளார்.‘நல்வரவு’ என்ற சொல்லை முதன் முதலில் பயன்படுத்தியவர் சேக்கிழார் (பக்., 37). ஜாதி வெறுப்பின்றி, சேக்கிழார் கால, சமுதாயம் ஒற்றுமையுடன் இருந்ததற்கு ஆதாரமாக, திருநீலகண்ட யாழ்ப்பாணரையும், திருநாளைப் போவாரையும், ‘ஐயரே’ என்று அழைக்கும் சேக்கிழார் திறனைக் குறிப்பிடுகிறார்.சேர, சோழ, பாண்டியர், பல்லவர் வரலாற்றுத் தடயங்களை விவரிக்கிறார். மனுநீதி, இயற்பகை, திருஞானசம்பந்தர், சேக்கிழார் ஆகியோரின் பன்முக ஆளுமைகளைப் படம் பிடித்துக் காட்டி உள்ளார். பெரியபுராணத்தில், சைவ சித்தாந்தம் வேரோடிக் கிடப்பதையும் விளக்குகிறார். சிவனிடம் அன்பும், தொண்டும், இடர் தடைகள் தாண்டும் கொள்கை உறுதியும் கொண்ட அடியார்களை இந்நுால் ஆய்ந்து போற்றுகிறது.பெரியபுராணப் புதையலைக் காண உதவும் திறவுகோல் இந்த ஆய்வு நுால்!–முனைவர் மா.கி.ரமணன்


முக்கிய வீடியோ