இராமகாதைக்குக் கம்பனின் நன்கொடை
12, தாண்டல் கந்தசாமி ராஜா தெரு, ராஜபாளையம்-626117 (பக்கம்: 116) கம்பராமாயணம் அள்ள அள்ளக்குறையாத, கருத்துக் கருவூலம் என்பதை யாவரும் அறிவர். அதில் சில செய்திகள், அதன் சிறப்பின் காரணமாக, எதிர்த்தாக்கத்தால் மொழிபெயர்ப்பு அடைந்து, வான்மீகி இராமாயணத்தின் தென்புலவழக்கில் இடம் பெற்று வழங்கி வருவதை, சிறப்பாக ஆய்வு செய்து இந்நூலாசிரியர் விளக்குகிறார்.இந்நூல், நான்கு பெருந்தலைப்புகளையும், ஏழு உள்தலைப்புகளையும் கொண்டுள்ளது; ஆசிரியரின் மிகச்சிறந்த ஆய்வுரைகளை அதில் கண்டு மகிழலாம்.இராமாயணம் பண்டைக் காலத்தில், எப்படியெல்லாம் மாறுதல் பெற்று வளர்ந்தது என்பதை முதல் இயலிலும், வான்மீகியின் இராமாயணம் பாரத நாட்டின், பல பகுதிகளிலும் வேறுபட்டு வழங்கி வந்ததை இரண்டாம் இயலிலும், தமிழில் கம்பனுக்கு, முன்னும் பின்னும் இராமகாதை வழங்கிய முறையை மூன்றாம் இயலிலும் காண்கிறோம்.இராமாயணத்திற்கு கம்பன் அளித்த நன்கொடையாக, இரணியன் வதைப்படலத்தை விளக்குவது மிக அருமை (பக்கம்: 94)நூலின் ஆரம்பத்தில், இராமாயண நூல்களின் பட்டியலாக, 48 நூல்களைக் கூறுவது, இராமகாதையின் உயர்வுக்கு எடுத்துக்காட்டாகக் கொள்ளலாம்.