வெந்து தணிந்தது காடு
காதல் சார்ந்த கொலை வழக்கை மையப்படுத்தியுள்ள நாவல் நுால். கொலை வழக்கில் சிறையில் அடைக்கப்படுகிறாள் கதாநாயகி செல்வி. அவளை மீட்க துடிக்கிறார் ஜெயில் அதிகாரி சிவானந்தம். ஆனால், தண்டனையை ஏற்பது செல்வியின் நிலைப்பாடாக உள்ளது. இந்தச் சூழலில் போட்டி போட்டு செல்விக்கு நல்ல மனங்கள் ஆதரவு தருவதை சித்தரிக்கிறது.நிஜ வாழ்வில் கதை ஆசிரியரின் கண் முன் நிகழும் மரணம், அவரை நிலைகுலையச் செய்கிறது. அந்த தாக்கத்திலிருந்து மீண்டு வருவதற்குள், பச்சைப்புடவைக்காரி செல்வியை வாழ வைக்கும் வேலையை அவருக்கு தருகிறாள். அதை முடித்தாரா என்பது தான் கதை. சில திரைப்படங்களில் இயக்குநரே காட்சிகளில் தோன்றுவார். அதை போல் இந்தக் கதையில் அண்ட சராசரங்களை இயக்கிக் கொண்டிருக்கும் பச்சைப்புடவைக்காரியே சில காட்சிகளில் தோன்றுகிறாள். இந்தக் கதை திரைப்படமாக எடுக்கப்பட்டால், அந்தக் காட்சிகளில் எல்லாம் மக்கள் செய்யும் ஆரவாரம் விண்ணை பிளக்கும். மரணத்தை வரமாக கேட்டவளுக்கு நல்ல வாழ்க்கையை தரும் அளவுக்கு அன்பு சூழ்ந்த உலகம் இந்தப் பிரபஞ்சத்தில் இருக்கிறது என்பதை காட்டுகிறது. காவல் துறையின் கண்ணியம், கருணை யதார்த்த காட்சிகள் வழியாக காட்டப்பட்டுள்ளது. துாய காதல், அதை வேரறுக்கும் ஜாதி பிரச்னை, மதுவால் அழியும் குடும்பங்கள் என, சமுதாய அக்கறை வலுவான வார்த்தைகளால் மிளிர வைக்கிறது. மது அரக்கன் காட்டு விலங்கை விட மோசமான நிலைக்கு மனிதனை தள்ளும்போது, முடிவை நோக்கி கதை விரைகிறது. அன்பு காட்டுவது எப்படி என்று அரிச்சுவடியிலிருந்து ஆரம்பித்து பாடம் நடத்துகிறது. கதைக்குள் கதையையும், அதில் அன்பையும் பொதிந்து பொக்கிஷமாக்கி இருக்கிறது. காதல், பாசம், தவிப்பு, தியாகம், மன்னிப்பு குவியலாக உள்ளன. புத்தகத்தை படித்து முடிக்கும் போது நல்ல திரைப்படத்தை பார்த்த நிறைவு ஏற்படுகிறது. அன்பை தேடி அலையும் மனங்களுக்கு தாய்மடியாக உள்ள நுால்.– சுமித்ரா தேவி




