வெற்றியின் ரகசியம்
தமிழ் சினிமாவில், ‘இருந்தாலும் மறைந்தாலும் பேர் சொல்ல வேண்டும்... இவர் போல யார் என்று ஊர் சொல்ல வேண்டும்’ என ஒரு பாடல் வரி உண்டு. அனைவருக்கும் ரசிக்கும் வகையில் அமைந்த பொருத்தமான கருத்துள்ளது இது. இந்த கருத்தின் அடிப்படையை வாழ்வில் உண்மையாக்க வேண்டுமென்றால் என்ன செய்ய வேண்டும். இந்த கேள்விக்கு, ‘கடுமையாக உழைத்து வெற்றி பெற்றாக வேண்டும்...’ என்பது தான் ஒரே பதில். சரி... வெற்றி பெறுவதன் ரகசியம் என்ன... அதற்கு இந்த நுால் தக்க முறையில் வழி காட்டுகிறது. துணிச்சல், விட்டுக் கொடுத்தல், பிரச்னைகளின் அடியாளத்தை அறிந்து தீர்த்தல், மன உறுதியுடன் செயல்படுதல், முயற்சியுடன் கூடிய கடின உழைப்பு, காலத்தை பொன் போல போற்றுதல், சிறப்பான தொடர்பியல் திறன், நேர்மையான செயல்பாடு உள்ளிட்டவை போன்ற அரிய குணநலன்களை வளர்த்து இருந்தால், வெற்றி இலக்கை எளிதில் எட்டலாம். இந்த அடிப்படை கருத்து, புத்தகம் முழுதும் வலியுறுத்தப்பட்டுள்ளது. இந்த பண்புகளை வளர்த்துக் கொள்ள என்ன செய்ய வேண்டும் என்பதற்கான பாதையையும் காட்டுகிறது. இந்த நுாலை படிப்போர், சரியான மனப்பக்குவம் அடைந்து, திட்டமிடலுடன் வெற்றிக்கு அடித்தளம் அமைப்பர் என்பதில் சந்தேகமில்லை. -– தி.செல்லப்பா




