விட்டு விடுதலையாகி...
அன்பும், கருணையும் மரணிக்காதவரை மண்ணில் ஈரம் கசிந்து கொண்டே இருக்கும் என்பதை நெகிழ்ச்சியுடன் சொல்லும் நுால். உறவில்லாமல் ஆதரவற்று நிற்போரின் அன்பு பரிமாறுதலின் அரங்கேற்றமாக உள்ளது. நேசிப்போரின் மரணம் கொடுமையானது. கணவன், குழந்தைகளை பறிகொடுத்த கொடூரத்தின் வலியை தாங்க முடியாமல் வெறுப்போடு தன் சாவிற்காக காத்திருக்கும் சுவாதியின் மனப் போராட்டத்தில் கதை துவங்குகிறது. எட்டு வயதில் பெற்றோரை இழந்து, 20 ஆண்டுகளாக தனியாக வாழ்ந்து வரும் பாலா உள்ளே நுழையும்போது சூடு பிடிக்கிறது. நட்டாற்றில் தவித்துக் கொண்டிருந்த சுவாதியின் கையைப் பிடித்து கனிவான வார்த்தையால் கரை சேர்த்ததை உருக்கமாகச் சொல்கிறது. கண்ணதாசனின் கவிதைகள் கதையில் ஒரு பாத்திரமாகவே அமைந்திருப்பது சிறப்பு அம்சம். கந்தல் துணியின் கவிதையில் வாழ்வின் உண்மையையும், ஆயிரத்தில் ஒருவன் திரைப்படத்தில் ‘அதோ அந்த பறவை...’ என துவங்கும் பாடலில் சுதந்திர துள்ளலையும், பாலும் பழமும் திரைப் படத்தில் ‘அடித்தாலும், உதைத்தாலும் நான் உந்தன் பிள்ளை...’ என்ற பாடல் வரிகளில் இறைவிக்கும், நமக்குமான உறவின் ஆழத்தையும் சொல்லும் முறை வித்தியாசமான உத்தி. கதைக்குள் கதைகளாக மலரும் கதை, கவிதைகள் எங்கு தேடினாலும் கிடைக்காத பொக்கிஷங்கள். பிரேம் -– பிரியா காதல் ஜோடிகள் பசி, மூப்பு, இறப்பு என வாழும் மனிதனுக்கும், பரிபூரண ஆனந்த நிலையில் இருக்கும் இறைவனுக்கும் இடையேயான தொடர்பை நுட்பமாக உணர வைக்கிறது. மனங்கள் அன்பால் நிரம்பி வழியும் நோக்கத்தில் எழுதப்பட்ட நுால். – சுமித்ரா தேவி