பச்சைப்புடவைக்காரியான மீனாட்சியுடன் அனுதினமும் பேசி, அவளிடம் வாதம் செய்து, சண்டை போட்டு, அவளுடைய அன்பிற்கு அடிமையாகி, அவளுடன் கொஞ்சிக் குலாவிக் கொண்டிருப்பவர்தான் வரலொட்டி ரெங்கசாமி. அதனாலேயே அவருடைய நாவல்களில் எல்லாம் பச்சைப்புடவைக்காரி ஒரு பாத்திரமாக வந்துவிடுவாள். ஆனால் அபூர்வமாகச் சில நாவல்களில் பச்சைப்புடவைக்காரி ஒரு பாத்திரமாக வரமாட்டாள். ஒவ்வொரு பாத்திரமாகவும் அவளே பரிமளிப்பாள். இருப்பதெல்லாம் நான் மட்டும்தான், என் சாரம் அன்பு மட்டும்தான் என்று பறைசாற்றுவாள். அந்த அபூர்வ வகையைச் சேர்ந்த நாவல்தான் “தேடலின் முடிவில்..”. மனித மனங்கள் மகா சமுத்திரங்கள். அவற்றில் புதைந்திருக்கும் ரகசியங்கள் நம் கற்பனைக்கும் எட்டாதவை. சமுத்திரத்தின் மேற்பரப்பில் தென்படும் அலைகளைக் காட்டிலும், ஆழத்தில் அடங்கிக் கிடக்கும் உணர்வுச் சுழல்களே அதிகம். அந்த உணர்வுச் சுழல்களுக்குள் இறங்கி, மனித இனத்தின் காயங்களையும், அந்தக் காயங்களை மறைக்க மனிதர்கள் அணியும் முகமூடிகளையும், இவை எல்லாவற்றையும் தாண்டி இன்னும் ஆழமாகப் போனால் மானுட ஆன்மாவில் மிளிரும் தூய்மையான அன்பினையும் ஆழமான அமைதியையும் நுாலாசிரியர் தன் வார்த்தை உளிகளால் செதுக்கிச் செதுக்கி உருவாக்கிய அழகிய சிற்பம்தான் தேடலின் முடிவில். நாம் பல புத்தகங்களைப் படிக்கிறோம். ஆனால் சில புத்தகங்கள்தான் நம்மைப் படிக்கின்றன. படித்ததை நம்மிடமே துணிச்சலாகச் சொல்கின்றன. அதுவரை நாம் பயணித்து வந்த வாழ்க்கைப் பாதையைத் தலைகீழாக மாற்றிவிடுகின்றன. அந்த வகையைச் சேர்ந்த புத்தகம்தான் தேடலின் முடிவில். இது எழுத்துக்களால் உருவான கதையல்ல. உணர்வுகளால் மட்டுமே உருவான ஒரு உன்னதமான உரைநடைக் கவிதை. இதைப் படிக்கும் ஒரு வாசகி தன்னிலை மறந்து தன் மனசாட்சியுடன் ஆத்மார்த்மாகப் உரையாட, உறவாடத் தொடங்குவாள். அந்த உரையாடலும் உறவாடலும் அவளைப் பச்சைப்புடவைக்காரியின் சந்நிதானத்திற்கு அழைத்துச் செல்லும். கதையின் நாயகனான ஷ்யாம் வளர்ந்து வரும் எழுத்தாளன். தன் சகோதரியான நரம்பியல் மருத்துவர் சாம்பவியின் உதவியாளனாகப் பணிபுரிகிறான். தன் கதை ஒன்றாவது திரைப்படமாக வேண்டும் என்று துடிக்கிறான் ஷ்யாம். அவன் ஒரு கத்துக்குட்டி இயக்குனரைச் சந்திக்கும் காட்சியோடு கதை தொடங்குகிறது. திரையுலகம் என்ற மாய விளக்கைத் தேடி வந்து மாய்ந்து போகும் இளைய தலைமுறைக்கு இந்த நுாலின் முதல் அத்தியாயத்தை மனப்பாடப் பகுதியாக வைக்க வேண்டும். பச்சைப்புடவைக்காரி நிகழ்த்தும் அன்பின் அற்புதங்களைக் காண நாம் அதிக தூரம் செல்ல வேண்டாம். ஒரு சிறிய மருத்துவமனையில்கூட அவளால் தன் வானளாவிய அன்பை அற்புதமாக வெளிப்படுத்த முடியும். ஒரு ஏழைத் தாயின் மகனை மரணத்தின் வாயிலிருந்து பைசா செலவில்லாமல் மீட்டுத் தரும் டாக்டர் சாம்பவியிடம் பச்சைப்புடவைக்காரியைத் தரிசனம் செய்கிறோம். சாம்பவியிடம் மற்றொரு உதவியாளராகப் பணிபுரியும் பேரழகியான வந்தனாவின் தன்முனைப்பற்ற காதலிலும் பச்சைப்புடவைக்காரியின் தாயன்பைத்தான் தரிசிக்கிறோம். கோடீஸ்வரியான தர்ஷணியின் கர்வத்துக்குப் பின்னால் இருக்கும் தனிமையின் வலியை அறியும்போது நமக்கும் லேசாக வலிக்கத்தான் செய்கிறது. அவளுடைய முரட்டுத்தனமான அன்பிலும் நாம் பத்ரகாளியின் திருவடிவத்தைத்தான் பார்க்கிறோம். ஒரு கதையைத் திரைக்கதையாகவே எழுதுவது நுாலாசிரியரின் சிறப்பு. சாம்பவி தன் தம்பியான ஷ்யாமின்மேல் வைத்திருக்கும் பாசம், அவன் தர்ஷணியிடம் அடி வாங்கும்போது அவள் துடிப்பது, ஷ்யாம் சேற்றில் விழுந்து தன் சகோதரியிடம் மன்னிப்பு கேட்பது, அவனை அந்தச் சேற்றோடு சேர்த்து சாம்பவி தழுவிக் கொள்வது – இந்தக் காட்சியைப் படித்துவிட்டு அழாமல் இருப்பவர்கள் கல் நெஞ்சுக்காரர்கள் என்று அச்சடித்த சான்றிதழே கொடுத்துவிடலாம். இதுவரை தன் நாவல்களுக்குள் சிறுகதைகளைத்தான் புகுத்தி வந்தார் நுாலாசிரியர். இந்த நாவலிற்குள் ஒரு முழு நீள நாவலையேபுகுத்தியிருக்கிறார். நிஜம் என்னும் கடலும் கற்பனை என்னும் வானமும் சந்திக்கும் அந்தத் தொடுவானம் எந்த ஒரு வாசகியையும் சிலிர்க்க வைக்கும். கதையின் கடைசி அத்தியாயத்தில் அநியாயத்திற்குத் திருப்பங்கள். நமக்குத் தலை சுற்றுகிறது. அந்தத் தலை சுற்றலில் அதுவரை புரியாததெல்லாம் புரிகிறது. நம் வாழ்க்கையின் பெரும்பகுதியைத் தேடல்களிலேயே தொலைத்துவிடுகிறோம். வண்டிச் சாவியைத் தேடுகிறோம். நிம்மதியைத் தேடுகிறோம். நிரந்தரமான சந்தோஷத்தைத் தேடுகிறோம். தேடல்கள் முடியும் முன்பே நம் வாழ்க்கை முடிந்துவிடுகிறது. ஒரு வேளை நாம் வாழும்போதே நம் தேடல் முடிந்துவிட்டால்.. . . அந்தத் தேடலின் முடிவில் அப்படி என்னதான் இருக்கும்? அதை அறிந்து கொள்ளும் ஆர்வம் இருந்தால் இந்தப் புத்தகத்தை நீங்கள் அவசியம் படிக்க வேண்டும். – சுமித்ரா தேவி
தேடலின் முடிவில்...
-
வெளியீடு: 48. ஆர்யா கவுடர் ரோடு, மேற்கு மாம்பலம், சென்னை - 600 033.தொலைபேசி: 044-2480 3091 / 3092 / 3093 / 3094.இ-மெயில்: chennai.sales@jaicobooks.com
-
வெளியீடு: 48. ஆர்யா கவுடர் ரோடு, மேற்கு மாம்பலம், சென்னை - 600 033.தொலைபேசி: 044-2480 3091 / 3092 / 3093 / 3094.இ-மெயில்: chennai.sales@jaicobooks.com
-
வெளியீடு: 48. ஆர்யா கவுடர் ரோடு, மேற்கு மாம்பலம், சென்னை - 600 033.தொலைபேசி: 044-2480 3091 / 3092 / 3093 / 3094.இ-மெயில்: chennai.sales@jaicobooks.com
-
அதிர்ச்சியூட்டும் இலஞ்சம்
நிவேதிதா பதிப்பகம், 2, எப்3, தத்தாத்ரேயா அபார்ட்மென்ட்ஸ், விருகம்பாக்கம், சென்னை –
ஏழை, நடுத்தர மக்களுக்கான அத்தியாவசிய தேவைகள், வேண்டுதல்கள் லஞ்சம் இன்றி நிறைவேற்றப்பட்டாலே எந்த இலவசங்களையும் அரசு தர வேண்டியதில்லை. ‘லஞ்சம் வாங்குவது பிச்சை எடுப்பதற்கு சமம். ஊழலில் ஈடுபடுவோரை துாக்கில் போட்டால் தான் சரியாக இருக்கும்’ என பலமுறை நீதிமன்றங்கள் அதிருப்தி தெரிவித்தாலும் லஞ்சம் ஒழிந்தபாடில்லை. லஞ்சம் தர மறுத்தவர்கள், வாங்கியோரை சிறைக்கு அனுப்பியவர்கள், அப்பணியைச் செய்யும் லஞ்ச ஒழிப்பு போலீசார் அனைவரும் சுதந்திரப் போராட்ட வீரர்களுக்கு ஒப்பாவர் என்கிறார் இந்நுாலாசிரியர். அரசு அலுவலகங்களில் லஞ்சம் பெற்ற சிலர், லஞ்சம் தர மறுத்து நேர்மையை நிலை நாட்டிய நீதிமான்கள், லஞ்சம் சம்பந்தமான பிற செய்திகள் ஆகியவை குறித்து எழுதப்பட்ட கட்டுரைகளின் தொகுப்பே இந்நுால். – சிவசு
-
இந்தியாவின் எடிசன் என போற்றப்பட்ட ஜி.டி.நாயுடு வாழ்வையும், சாதனையையும் எளிமையாக தரும் நுால். பள்ளிப் படிப்பு முடிக்காத நிலையிலும் சுய முயற்சியால் முன்னேறியதை எடுத்துக் கூறுகிறது. உணவகத்தில் வேலை பார்த்து, அந்த பணத்தில் ஆங்கிலேயரின் மோட்டார் சைக்கிளை விலைக்கு வாங்கியதை குறிப்பிடுகிறது. அதை பிரித்துப் போட்டு வேலை செய்ததை அறிந்தது குறித்தும் விவரிக்கிறது. பஸ் மற்றும் மோட்டார் தொழிலில் முன்னோடியாக விளங்கியதை எடுத்து கூறுகிறது. ஷேவிங் பிளேடு, மின்சார மோட்டார், ரேடியேட்டரில் நீண்ட நாள் தண்ணீர் இல்லாமல் ஓட்டுவதற்கான பொருள் என கண்டுபிடிப்புகள் நிகழ்த்தியதை விவரிக்கிறது. தொழில், வேளாண் துறையில் புதிய கண்டு பிடிப்புகளை உருவாக்கியது குறித்த நுால். – முகிலை ராசபாண்டியன்
-
பலதரப்பட்ட அரசியல் தலைவர்கள் மற்றும் பேச்சாளர்களின் தொடர்பால் ஏற்பட்ட அனுபவங்களை தொகுத்து தரும் நுால். சென்னையில் எம்.எல்.ஏ., ஹாஸ்டல் எவ்வாறு பயன்பட்டது என்பதை விளக்குகிறது. வாழ்க்கைக்குப் பணம் தேவையில்லை. வசதிக்குத்தான் பணம் தேவை; வாழ்க்கைக்கு வாசிப்பு அவசியம் என்கிறது வயிற்றுப் பசி, அறிவு பசிக்கு உள்ள வித்தியாசத்தை கூறுகிறது. கட்சிகளுக்கும் பல்லாயிரம் கோடி அசையும் அசையா சொத்துக்கள் இருப்பதை குறிப்பிடுகிறது. கல்வி நிலையங்களில் படிக்கும் சூழல் நிலவினால் மாணவர்கள் சினிமா நடிகர்களை தேடி போக மாட்டார்கள் என்கிறது. அனைத்து தரப்பினரும் படிக்க வேண்டிய நுால். – வி.ராமலிங்கம்
-
ஏன்சியன்ட் சிவிலைசேஷன் ஆன் தி பேங்க்ஸ் ஆப் டூ ரிவர்ஸ் (ஆங்கிலம்)
கங்கை மற்றும் நைல் நதி நாகரிகம் குறித்த செய்திகளை தரும் நுால். கங்கை உற்பத்தியாவதில் இருந்து தொன்மை வரலாறு, பண்பாடு விவரிக்கப்பட்டிருக்கிறது. நதியை தெய்வமாக வணங்கும் சடங்குகள், கும்பமேளா குறித்தும் கூறப்பட்டுள்ளது. நதியை பண்பாட்டு ரீதியாக விளக்கி, மனித மனதில் எப்படி வேரூன்றுகிறது என்பதை தெளிவுபடுத்துகிறது. கங்கை நதியோடு கலக்கும் கிளை நதி விபரமும், பாய்ந்து வளப்படுத்தும் பகுதிகள் பற்றியும் தரப்பட்டுள்ளது. எகிப்து நாட்டில் பாயும் நைல் நதியின் தொன்மையும், வரலாறும், பண்பாடும் நாகரிகத்தின் அடித்தளமும் தெளிவாக கூறப்பட்டுள்ள நுால். – ஊஞ்சல் பிரபு
-
வாழ்க்கை துணையை இழந்தோர் மனதில் பதிக்க வேண்டிய யோசனைகளை, தக்க எடுத்துக்காட்டுகளுடன் விளக்கும் நுால். குழந்தைகளின் தவறான செயல்களுக்காக கோபம் கொள்ள வேண்டாம்; நுாலகம் சென்று படித்தால், அங்கு வரும் மூத்த குடிமக்களின் நட்பு கிடைக்கும்; மாலை நேரம் உலாவுவது நல்ல உடற்பயிற்சியாக அமையும். இது போன்று வழிகாட்டுகிறது. ஆண்கள் செய்யும் வேலைகளை, பெண்களும் செய்ய வேண்டும். படிக்கும் பழக்கமானது ஆனந்தம், அமைதியை தரும்; முதுமை வந்தாலும், கடந்த கால நினைவுகளை எண்ணினால், ஆறுதலும், மகிழ்ச்சியும் உண்டாகும். கவிஞர்கள் வாலி, கண்ணதாசன் மேற்கோள்களுடன் விளக்கும் நுால். – முனைவர் கலியன் சம்பத்து
-
இறை பக்திக்கு உகந்த தோத்திர புத்தகம். ஸ்ரீ கணேச அஷ்டோத்தர சத நாமாவளி ஒன்பது பகுதிகளாகவும், சித்தி, புத்தி தேவிக்கு தலா ஒரு அஷ்டோத்தர சத நாமாவளியும் உள்ளன. ஸ்ரீ சுப்பிரமணியர் அஷ்டோத்தர சத நாமாவளியும், ஸ்ரீ சண்முகரின் ஒவ்வொரு முகத்திற்கும் ஒரு அஷ்டோத்தர சத நாமாவளியாக ஆறுமுகத்திற்கும் தனித்தனியாக உள்ளன. வள்ளி, தேவசேனாவுக்கு தனித்தனி அஷ்டோத்தர சத நாமாவளி உள்ளது. ஸ்ரீ ராமருக்கு ஒரு அஷ்டோத்தர சதா நாமாவளி உள்ளது போல், ஸ்ரீ சீதாதேவிக்கும், ஸ்ரீ ஆஞ்சநேயருக்கும் தனித்தனி அஷ்டோத்தர நாமாவளிகள் தரப்பட்டுள்ளன. பூஜை புனஸ்காரங்களுக்கு ஏற்ப தொகுக்கப்பட்டுள்ள கதம்ப மாலை. – டாக்டர் கார்முகிலோன்
-
முருகப்பெருமான் ஆட்கொண்ட சித்தர்கள் பற்றி விளக்கமாக தரும் நுால். பெண் சித்தர்களும் அடங்கியுள்ளது குறிப்பிடத்தக்கது. முருகப்பெருமானால், பக்தர்கள் எப்படி ஆட்கொள்ளப்பட்டனர் என்பதை எடுத்துரைக்கிறது. அவர்கள் செய்த அரும்பெரும் செயல்கள், சித்து விளையாட்டுகள் என ஏராளமான தகவல்கள் அலங்கரிக்கின்றன. பன்னீரிலையின் விபூதி பிரசாத பெருமை விரிவாக எடுத்துரைக்கப்பட்டுள்ளது. பழமுதிர்சோலை பெயர் காரணமும், அவ்வையின் அகந்தையை முருகன் அகற்றிய விதமும் எடுத்து சொல்லப்பட்டுள்ளது. விராலிமலையில் முருகனுக்கு சுருட்டு படைக்கும் காரணம் விளக்கப்பட்டுள்ளது. முருகப்பெருமானுக்கு சூட்டப்பட்ட புகழ்மாலை நுால். – டாக்டர் கார்முகிலோன்
-
பிற மாநில மொழிகளில் தமிழ்ச் சொற்கள் வழங்கி வருவதை பட்டியலிட்டுள்ள நுால். மலையாளத்தில் தமிழ் சொற்கள் அதிகம் பயன்பாட்டில் உள்ளதை எடுத்துக்காட்டுகிறது. மரம், பூ, பழம், மழை, நெல் போன்ற சொற்கள் மலையாளத்தில் சிறு மாற்றத்துடன் வழங்குவதை சுட்டிக்காட்டுகிறது. ஹிந்தி மொழியில் ராஜா, ராணி, சவால் போன்ற சொற்கள் பயன்பாட்டில் உள்ளதை கூறுகிறது. சில மொழிகளில் பல சொற்கள் சிறு மாற்றங்களுடன் உள்ளதை எடுத்துக்காட்டுகளுடன் தருகிறது. வங்கம், உருது, சமஸ்கிருதம், தெலுங்கு மொழிகளில் வழங்கும் தமிழ் சொற்கள் பற்றியும் அறியத் தருகிறது. மாநில மொழிகளில் தமிழ் சொற்கள் பயன்பட்டு வருவதை அறியத் தரும் நுால். – ராம்
-
திறமையுள்ளோரை உற்சாகமாக பாராட்ட கற்றுத்தரும் புத்தகம். முயற்சி செய்வோரை பாராட்ட கூறுகிறது. அது எல்லாருக்கும் பிடிக்கும் என்பதை, 32 கட்டுரைகளில் அமைத்து காட்டுகிறது. வெற்றிக்கான வழியாக நம்மைப் பற்றி உயர்வாக எண்ணிக் கொள்வதை எடுத்துரைக்கிறது. உயர்ந்த எண்ணங்களை வளர்த்து, சுய மதிப்பை பெருக்கிக் கொள்வதை கடை பிடிக்க கூறுகிறது. முயற்சி உள்ளோரிடம் தெய்வம் முந்தி வந்து நிற்கும் என்பதை அறிய வைக்கிறது. வெற்றி கடைச் சரக்கு அல்ல; இலக்குக்கு முயற்சியே மிக முக்கியம் என்கிறது. வாய்க்கால் வழியோடும் நீர் வயலுக்கு உதவுவது போல், நல்ல நண்பர்கள் வாய்த்தால் வெற்றி நிச்சயம் என உரைக்கும் நுால். – சீத்தலைச்சாத்தன்
-
உணர்ச்சியை கையாளும் வழிமுறைகளை கூறும் நுால். ஒவ்வொருவரும் அவசியம் தெரிந்திருக்க வேண்டிய தகவல்களுடன் உள்ளது. மூளையில் இருந்து உணர்வுகள் சிறகடிப்பதை எடுத்து கூறுகிறது. ஒவ்வொரு கட்டுரையிலும் பொருத்தமான கோட்டுச்சித்திரங்கள் தரப்பட்டுள்ளன. சின்ன சொற்றொடர்களில் தகவல்கள் விளக்கப்பட்டுள்ளன. இளம் தலைமுறைக்கு வரமாக அமைந்துள்ளது. ஒரு கோவில் கருவறையில் ஒலிக்கும் மந்திர ஓசை, அர்ச்சகரின் உணர்வின் வெளிப்பாடு; தெருவில் அரசியல் கட்சி தொண்டன் போடும் கோஷமும் உணர்ச்சியின் வெளிப்பாடுதான் என்பதை தெளிவாக்குகிறது. சில திரும்பத் திரும்ப படிக்க உகந்தவையாக உள்ளன. உணர்ச்சியை புரிந்து அதற்கு ஏற்ப வாழ உதவும் நுால். – சீத்தலைச்சாத்தன்
-
வாழ்க்கைத் தத்துவத்தை மகான்களின் செயல்பாடுகள் வழியாக மேற்கோள் காட்டி விளக்கும் கவிதை நுால். மண்ணில் சிறப்பாக வாழ வழி காட்டும் சிந்தனைக் களஞ்சியமாக உள்ளது. இறைவனிடம் வேண்டுகோள் விடுக்கும் போது, உள்ளக் குமுறல்களை உள்ளது உள்ளபடி கூற வேண்டும் என்கிறது. திருக்குறளே உலகப் பொதுமறை என குறிப்பிடுகிறது. புறம் பேசுவோரை சமூகம் புறந்தள்ளும் என்கிறது. இலக்கண விலங்கை விலக்கிய தனித்திறன் உடையவர் மகாகவி பாரதி என்கிறது. இலக்கிய உலகை இனிதுறத் துலக்கியதை புகழ்மாலையாக தொடுக்கிறது. தொழிற்சங்க தலைவர் சிங்காரவேலர் தன்னடக்கம், தனிப் பெருமையை குறிப்பிடுகிறது. உள்ளத்தை கொள்ளை கொள்ளும் கவிதைகளின் தொகுப்பாக மலர்ந்துள்ள நுால். – டாக்டர் கார்முகிலோன்
-
சமூக பார்வை உடைய கவிதைகளை உள்ளடக்கிய நுால். அவலங்களைச் சுட்டிக்காட்டி கேள்விக் கணைகளுடன் உரத்துக்குரல் எழுப்புகிறது. மக்களாட்சிக்கு பொருந்தாத நடைமுறைகளையும், அடக்குமுறைகளையும் கடுமையாக விமர்சிக்கிறது. லஞ்சம், ஊழலை எதிர்க்கிறது. சமூக முரண்களை படம்பிடித்துக் காட்டி கேள்விக் கணைகளைத் தொடுக்கிறது. சமூக பேதங்களால் அநீதி இழைக்கும் அதிகார வர்க்கத்தை வன்மையாகச் சாடுகிறது. ஜாதி பேதம், பெண்ணாசை, பேராசையை கண்டிக்கிறது. உணர்ச்சிவசமான சொல்லாடல்களால் திரும்பிப் பார்க்க வைக்க முயற்சிக்கிறது. இளம்பெண்ணின் குமுறலை காட்சியாக்கி நெகிழ்ச்சியுறச் செய்கிறது. கவிதைகள் தேர்ந்தெடுக்கப்பட்ட சொற்களால் அமைக்கப்பட்டுள்ளன. நெடிய கவிதை நுால். – கவிஞர் மெய்ஞானி பிரபாகரபாபு
-
உடலும், மனமும் எப்படி ஒன்றிணைந்து செயல்பட வழிகாட்டும் விதமாக அமைந்த நுால். வாழ்வுக்கு உகந்த பாதையை எடுத்துக் காட்டுகிறது. ஒரு நாளைக்கு இதயம் எத்தனை முறை துடிக்கிறது; நகமும், கேசமும் எவ்வளவு வளர்கின்றன போன்ற துல்லிய தகவல்கள் கண்டுபிடிக்கப்பட்டதை வியப்புடன் தெரிவிக்கிறது. பழந்தமிழ் பாடல்களில் குறிப்பிடும் அளவு விகிதம், இன்றைய கணக்கில் வகுத்து காட்டி விளக்குகிறது. சித்தர்கள் வகுத்தளித்த மூலிகைக்குளியல் பற்றிய தகவல்கள் வியப்பூட்டுகின்றன. உடல் நலத்தை பேணுவதன் அவசியம் அழகாக எடுத்துரைக்கப்பட்டுள்ளது. தாய், சேய் நலம் பற்றியும் கூறப்பட்டுள்ளது. இனிதாக வாழ எண்ணுவோர் அவசியம் படிக்க வேண்டிய நுால். – டாக்டர் கார்முகிலோன்
-
வாழ்வில் பாவம், அதற்கு தண்டனை, தண்டனைக்கு தீர்வு என, மூன்று நிலைகளில் ஓலைச்சுவடிகளில் இருந்து விளக்கம் தரும் நுால். கணவன் – மனைவி வஞ்சகத்துக்கு கிடைக்கும் நரக தண்டனைக்கு தீர்வாக பீஜ மந்திரம் தரப்பட்டுள்ளது. எந்திரங்களில் ஓவியம் வரைந்து அதனுள் எழுத்துக்களை உச்சரிக்கும் விதமும் தரப்பட்டுள்ளது. ஏமாற்றினால் என்ன தண்டனை என்பதை சொல்கிறது. கருட புராணம், கட உபநிஷத்தை மையமாகக் கொண்டு அமைந்துள்ளது. என்ன மாதிரியான தவறுகளுக்கு என்ன தண்டனைகள் என வரிசைப்படுத்தி உரைக்கிறது. குற்றத்தின் விளைவான தண்டனைக்கு, தீர்வு கூ றப்பட்டுள்ளது. நலம், வளமாக வாழ வழி கூறும் நுால். – புலவர் ரா.நாராயணன்
-
இந்தியா மற்றும் அயல்நாடுகளில் அமைந்துள்ள, 50 ஹிந்து கோவில்களின் வரலாற்று பின்னணி மற்றும் ஆன்மிகச் சிறப்பை எடுத்துரைக்கும் நுால். வேதாரண்யம் பகுதியில் உள்ள சிவன் கோவிலில் தொடங்கி, இலங்கை நுணாவில் வைரவர் கோவிலுடன் நிறைவடைகிறது. வேதாரண்யம் மறைக்காடர் கோவிலை இலங்கை, யாழ்ப்பாணத்தில் உள்ள பக்தர்கள் வணங்கி வருவதை விபரமாக வழங்குகிறது. பரஞ்சோதி முனிவரும், தாயுமானவரும் வேதாரண்யத்தில் தோன்றி தொண்டு செய்த பின்னணியை அறியத் தருகிறது. மலேஷியா, பத்துமலை முருகன் கோவிலின் ஆன்மிக சிறப்புகளை அறியத் தருகிறது. பிரபல ஹிந்து கோவில்களை பற்றி தகவல்கள் தந்து தரிசிக்க வழிகாட்டும் புத்தகம். – முகிலை ராசபாண்டியன்
-
சமூகத்தின் நிச்சயமில்லாத சூழலை ஆராயும் கவிதைகளின் தொகுப்பு நுால். அன்றாட செயல்கள் நெருக்கடியுடன் இருப்பதை, ‘காத்திருத்தலின் கடைசி கணம் எப்படி பூக்கும்’ என தவிப்பதாக வெளிப்படுத்துகிறது. சமூகத்தில் ஒழுங்குகள் குலைந்து கிடப்பதை மென்மை வார்த்தைகளால் படம் பிடித்துக் காட்டுகிறது. அதிகாரத்தை தேடி அலையும் ஆரோக்கியமற்ற நிலையை பகடியுடன் சுட்டிக்காட்டுகிறது. சமூகத்தில் நிலவும் ஏற்றத்தாழ்வுள்ள மனப்போக்கை, ‘கிழக்கு வாசல் திறந்திருக்கிறது என்றாலும், அதன் வழியாக எல்லாரும் போக முடியாது. வீட்டுக்கு வீடு வாசற்படி’ என நயமுடன் சுட்டிக்காட்டுகிறது. சமூகத்தை சூழ்ந்திருக்கும் இருளை விலக்க முயலும் சிந்தனையுள்ள படைப்புகளின் தொகுப்பு நுால். – மதி ஆசிரியர் : கே.சாய் குமார் வெளியீடு : சுய பதிப்பு அலைபேசி : 93828 72358 பக்கம் : 120 விலை : ரூ.150 இ லங்கையில் உள்ள ஹிந்து கோவில்கள் பற்றி எடுத்துக் கூறும் நுால். சம்பந்தரும், சுந்தரரும் அகக்கண்ணால் உணர்ந்து பாடிய சிவன் கோவில்கள் பற்றிய தகவல்கள் உள்ளன. அருணகிரிநாதர், கதிர்காமத்திற்கென, 13 திருப்புகழ்கள் பாடியுள்ளதை அறிய தருகிறது. ராமாயணம் நடந்த காலம் பற்றிய விபர குறிப்புகள் பிரமிக்க வைக்கின்றன. திரிகோணமலை மான்கள் சரணாலயம் பற்றிய செய்தியும் உள்ளது. ஆறுமுக நாவலரின் தொண்டு பற்றி விரிவான தகவல்கள் உள்ளன. போதி மரம் விபரம் சிலிர்ப்பை ஏற்படுத்துகிறது. மன்னர் அசோகரின் மகள் சங்கமித்திரை, புத்த கயாவிலிருந்து போதி மரக் கிளைகள் எடுத்து வந்து நட்டதை அறிய தருகிறது. உலக கலாசாரச் சின்னங்கள் பற்றிய விபரங்களையும் தரும் நுால். – டாக்டர் கார்முகிலோன்
-
தொல்லியல் சான்றுகள் அடிப்படையில் அமைந்த வரலாற்று ஆய்வு நுால். செங்கல்பட்டு, செய்யூர் பகுதி பற்றிய செய்திகளை கொண்டுள்ளது. கல்வெட்டுகளில் செய்யூர், அதன் அமைவிடம், பெயர் காரணம், இலக்கிய ஆதாரங்கள் என, பல்வேறு வகையில் தகவல்கள் திரட்டி தரப்பட்டுள்ளன. கோவில் சார்ந்து பாடப்படும் பிள்ளைத்தமிழ் இலக்கியத்தில் உள்ள தகவல்களும் தெளிவுடன் தரப்பட்டுள்ளன. செய்யூரை சுற்றியுள்ள கிராமங்களில் காணப்படும் தொல்லியல் தளங்களில், தக்க முறையில் திரட்டப்பட்ட தகவல்கள் இடம் பெற்றுள்ளன. இங்கு, ஒரு கோழிக்கு நடுகல் அமைந்துள்ளது, வியப்பு தரும் செய்தியாக உள்ளது. சுமை தாங்கி, மந்தைக்கல், சதிக்கல், வழிபாட்டுக்கல், மந்திரக்கல் என, பல வகை ஆதாரங்களை முன்வைக்கும் ஆய்வு நுால். – ஒளி






உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்